31/07/2022
வடிவமைப்பு இல்லாத கட்டிடம் சொந்தக்காசில் சூனியம்
======================
நாம் பார்க்கும் பல்வேறு சிறிய வீடுகளும் கட்டிடங்களும் முறையாக பொறியாளரால் வடிவமைக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் இவை கணக்கீடுகள்மூலம் வடிவமைக்கப்படவில்லை என்றாலும் பெரும்பாலும் இதேப்போன்ற முறையாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் பிரதிகளாக இருக்கின்றன. அதாவது முறையாக வடிவமைக்கப்படும் கட்டிடங்களின் விபரங்களை மேஸ்திரிகளோ அல்லது சில கட்டுநர்களோ ‘Copy paste’ எனப்படும் ‘போலச் செய்தல்’ மூலம் பிரதியெடுக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக இது பல நேரங்களில் வெளியே தெரியும்படியான சிக்கல்களை எதையும் உருவாக்குவதில்லையென்றாலும் நிச்சயமாக இவை விரும்பத்தகாத விளைவுகளை உள்ளடக்கியவை என்று சொல்ல முடியும்.
உதாரணமாக கட்டிட வடிவமைப்புக்கான நிபுணர் இல்லாத இடத்தில், ஒரு கட்டிட மேஸ்திரி அல்லது கட்டுநர் ஏராளம் கட்டிடங்களில் தான் பணிபுரிந்த அனுபவத்தின்மூலம் கட்டிடத்தின் ஒரு படுக்கையறைக் கூரையின் (slab) தடிமனையோ அல்லது அதில் போடப்படும் கம்பிகளையோ இன்னொரு கட்டிடத்திலிருந்து நகலெடுக்கிறார். இங்கு கட்டிடத்தின் கம்பிகள் மற்றும் காங்கிரீட் தளங்களின் தடிமன் போன்றவை அறையின் நீள அகலங்கள் மற்றும் மேலிருந்து செயல்படும் எடை இவற்றைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் தான் எங்கோ பயன்படுத்திய 8*10 அடி அறையின் அளவீடுகளை 10*12 அடிகள் அல்லது 12*14 அடிகள் கொண்ட அறைக்கு பயன்படுத்துவாரானால் அது கட்டித்தின் உறுதித்தன்மையைக் கணிசமாகக் குறைக்கும். எதுவும் விரிசல்கள் கண்ணுக்குத் தெரியாதாலேயோ அல்லது தளம் உடைந்து கீழே விழுந்துவிடாததாலேயோ மட்டும் ஒரு கட்டிடம் பாதுகாப்பானது என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதன் காங்கிரீட் சட்டங்களில் ஏற்படும் சிறிய கண்ணுக்குத் தெரியாத விரிசல்கள்கூட கட்டிடத்தின் ஆயுளைக் கணிசமாகக் குறைக்ககூடியவை. அதேப்போன்று நகலெடுக்கும் கூரையில் மேல் எடை அதிகமான பயன்பாடுகள் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் புதியதாய் கட்டப்படும் கட்டியத்தில் மாடித்தோட்டம் போன்றவை திட்டமிடப்படலாம். இவை பாதுகாப்பற்றவை என்று சொல்வதைவிட ஆபத்தானவை.
அதே நேரத்தில் பாதுகாப்பாகச் செய்கிறேன் என்ற பெயரில் கம்பிகளைக் கூடுதல் பயன்படுத்துவதும்கூட பயனற்றதும் வீணான பொருள் விரையமும் மட்டுமின்றி கட்டிடத்தின் நொறுங்கும் தன்மையை (Ductity) அதிகரித்து தீங்கு விளைவிப்பதாகவே அமையும்.
ஒரே ஊருக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் மண்ணின் உறுதித் தன்மையில் பாரதூர வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே ஒரு கட்டிடத்தை அப்படியே இன்னொரு இடத்தில் நகலெடுப்பதாக இருந்தால்கூட அவற்றின் அடித்தளங்கள் ஒன்றாக இருக்க முடியாது.
மொத்தத்தில் வடிவமைக்கப்படாத கட்டிடங்கள் பாதுகாப்பாக இருப்பதுபோன்ற தோற்றம் தருவது, பக்கத்துவீட்டுக்காரர் குறிப்பிட்ட நோய்க்கு பயன்படுத்திய மருந்தை அதே அறிகுறிக்கு நாம் நேரடியாக வாங்கி பயன்படுத்துவதுபோலானது. கட்டிடங்கள் மனித உடல்போன்றவை. அவற்றின் பாதுகாப்பிலேயே நம் அன்புக்குரியவர்களின் உரிரும் அடங்கியிருக்கிறது. வெளிபார்வைக்கு பாதுகாப்பாய் தோன்றுவதால் மட்டும் ஒரு கட்டிடம் பாதுகாப்பாய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதாலோ காங்கிரீட்டுக்கு குளிரக் குளிர தண்ணீர் பாய்ச்சுவதாலோ மட்டும் கட்டிடம் உறுதியாகிவிடாது...
வடிவமைப்பு இல்லாத கட்டிடம் சொந்தக்காசில் சூனியம் வைப்பது போன்றது.