22/08/2026
"ப்ப்ப்ப்ப்ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் ஸ் ஸ் ஸ்..."
இதில் "ப்"கனடாவில் ஆரம்பித்து "ஸ்"கத்தாரில் முடியுமளவுக்கு அப்படி ஒரு கொ(கெ)ஞ்சலான இழுவை. ஆனாலும், அந்த கொஞ்சலான "ப்ளீஸ்" நிஜமாகவே இதயத்தை ப்ளீஸ் செய்து, இன்னும் கூட அந்தக்குரல் கேட்கலாம் போலிருந்தது.
"என்னாஆஆஆஆஆடா சொல்ற...?" என்று எஸ்.ஜே சூர்யா மாதிரி குழம்புவர்களுக்கு.....ப்ளீஸ், மன்னிக்கவும்.
அது கனடாவிலிருந்து வந்தவொரு Phone Call.
"ஹலோ.."
"எஸ்..."
"சரித்ரா பப்ளிகேஷனா?....."
"ஆ...ஆமா..."
"எனக்கு மேதகுவின் மகள் புத்தகம் கிடைக்குமா....? ப்ப்ப்ப்ப்ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் ஸ் ஸ் ஸ்....?"
மீண்டும் அதே கெ(கொ)ஞ்சல்.
"Yes, கிடைக்கும்..எங்கே அனுப்ப வேண்டும்.? ஸ்ரீலங்கா..? இந்தியா..? இல்லேன்னா..."
"கனடாவுக்கு அனுப்பவும்...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."
மீ.அ.கெ(கொ)ஞ்சல்.
"ஷ்யூர்..நோ இஷ்யூஸ்..!"
"பட் ஒரு சின்ன ரிக்வஸ்ட் ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."
மீ.அ.கெ(கொ).
"எஸ்..சொல்லுங்க..?"
"எனக்கு அந்த ரைட்டரோட ஆட்டோகிராஃபோட புக் வேணுமே...?"
"ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் சொல்லலியே..?" என்று கேட்க நினைத்து, "இது பிஸினஸ்..இதில் விளையாடாதே..!" என்ற உள்மன எச்சரிப்பால், விட்டுவிட்டேன்.
"அது..அது...கொஞ்சம் கஷ்டமாச்சே..!" தடுமாறினேன். ஏனெனில் புத்தகம் என்கைவசம் எதுவுமே இல்லை கையெழுத்திட்டு அனுப்பிட.
"ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."
"அதானே பார்த்தேன்.!"என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே,
"இல்ல..கையில் புத்தகம் இல்ல...இருந்தா போட்டு அனுப்பிடலாம்..!"
"நீங்க பப்ளிஷர் தானே..?எனக்கு உங்க கையெழுத்து வேண்டாம்.! எனக்கு அவர் கையெழுத்துப்போட்டு வேணும்..!"
"அடிபொலி..! அப்போ இவ்வளவு நேரம் உன்னை publisher ன்னு நெனச்சுதான் பேசிருக்கா போல.....கிராதகி..!" மனக்குரங்கு எக்களித்தது.
"என்னை எதுவேணாலும் சொல்லு..ரீடர்ஸை எதுவும் சொல்லாதே..!" ம.குரங்கை எச்சரித்துவிட்டு அவளிடம்,
"முயற்சி பண்றேன்ங்க..ஆனா கொஞ்சம் நாள் ஆகும்...!"
"எவ்வளவு நாள்...?"
"சிலபல வாரங்கள் கூட ஆகலாம்..!"
"எவ்ளோ நாள் ஆனாலும் பரவால்ல..வெய்ட் பண்றேன்...பட் புத்தகம் ரைட்டர் ஆட்டோகிராஃபோட தான் வேணும்...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."
அவளால் காத்திருக்க முடியும். பக்ஷே, ஞான் காத்திருக்க முடியாது. காரணம், புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் அனுப்பமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புவது சாலச்சிறந்தது. அதுவும் "மேதகுவின் மகள்" அனுப்புவதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வெளியே வந்திருக்கிறேன் வேறு.
யோசித்தேன். கூடவே அவளது அந்த இழுவையான ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ், கொஞ்சமாய் விளையாடத் தோண வைத்தது.
"அட ஏன்மா..புத்தகம் தான் முக்கியம். ரைட்டரா முக்கியம்..? கையெழுத்து நேரமாகும்..அதான் சொல்றேன். நீ உடனே வாங்கிடு.!"
"என்ன இப்படிச் சொல்றீங்க..?"
"அதுக்கில்ல....அவன் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை...ஆட்டோகிராஃப் எல்லாம் போட்டுத்தர...யார் எழுதினா என்ன..? வாசிக்கறது தானே முக்கியம். அதுக்காக சொன்னேன்.!"
ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.
மௌனம் சம்மதம் என்று அசட்டையாய் எடுத்துக்கொண்டு "எப்போ வேணும்..?" என்று நான் கேட்டு முடிப்பதற்குள்,
பெருவெடியாய் வெடித்தாள்.!!!!
"காமன் சென்ஸ் இல்ல...? நீங்க ஒரு Publisher தானே..? எத்தனை புத்தகம் பார்த்துருப்பீங்க? ஒன்னாவது படிச்சுருப்பீங்களா..? படிச்சுருந்தா எப்படி ஒரு எழுத்தாளரை மதிக்கணும்னு தெரியும்.! அதுசரி உங்களுக்கு பணம், பிசினஸ், விற்பனை இப்படித்தானே மைண்ட் போகும்..? ஒரு பெரும் போராட்டத்தை பத்தின படைப்பு மூலமா அவரோட உழைப்பை, கற்பனையை உலகத்துக்கு எடுத்துச்சொல்ற உன்னதமான வேலையை செய்யாம..இப்படி அவரையே நக்கல் பண்றீங்க...? உங்களுக்கு வேணா அவர் பெரிய ஆள் இல்லாம இருக்கலாம்.!! நாட் ஃபார் மீ..! வெறும் கையெழுத்தா பார்த்தா அதுவேறும் ஆட்டோகிராஃப். ஆனா புத்தகத்துல அந்தத்தொடல், அந்த உணர்வு...ப்ச்..! இப்படித்தான் எல்லாரையும் டீல் பண்ணுவீங்களா..?"
இப்போது எனக்கு,
ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.!!!
வெடிப்பைத் தொடர்ந்தாள்.
"அவரோட கையெழுத்து போட்டு அனுப்பமுடியும்னா சொல்லுங்க..!" இல்லனா நம்பர் கொடுங்க..! நானே பேசிக்கறேன்.!!!"
இனி எப்படி நம்பர் கொடுக்க...? அந்த ந(ம்)பரோடுதானே பேசிக்கொண்டு இருக்கிறாள் அவள்..!
"ஹலோ..! பதிலே சொல்லலை...?"
"எழுத்தாளர் நம்பர் மட்டும் கேட்காதீங்க...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."
இதில் "ப்"கத்தாரில் ஆரம்பித்து "ஸ்"கனடாவில் போய் முடிந்தது.
---------
இருநாட்கள் கழித்து, இன்னொரு Phone Call. வடகிழக்கு இந்தியாவில் இருந்து.
"எனக்கு மேதகுவின் மகள் புத்தகம் கிடைக்குமா....?"
கேட்டது, மிசோரம் தோட்டக்கலை கல்லூரியில் இருந்தொரு பேராசிரியர்.
மதிப்புமிக்கோரிடம் படைப்பு செல்லும்போது எப்போதுமே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதால்,
"ஸ்ஷ்யூர் சார்.!" என்றேன்.
"எனக்கு உடனே வேண்டுமே..?"
"கண்டிப்பா...ஒரு 2-3 days-ல கிடைச்சுடும்." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் வாட்சப்பில் சில புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அது மீடியாவில் யாருமே அதிகம் பார்த்திராத மேதகுவின் குடும்பப்படம்.
பார்த்ததும் அப்படியொரு சிலிர்ப்பு.! உணர்ச்சி பொங்கியது. நிறைய எழுதத்தோன்றிய புகைப்படம் அது.
"If you Dont mind, இதை நான் பயன்படுத்திக்கலாமா...?"
"எதுக்கு..? நான் ஒரு இன்ஃபர்மேஷனுக்காக அனுப்பினேன். எல்லாரும் பயன்படுத்திக்க இல்லை..! நீங்க புக் விக்கறீங்க. இதை வெச்சு என்ன பண்ணப்போறீங்க...?"
மீண்டும்,
"அடிபொலி..! அப்போ இவ்வளவு நேரம் இவரும் உன்னை publisher ன்னு நெனச்சுதான் பேசிருக்கார் போல.....கிரா...த..!" மனக்குரங்கு எக்களிக்கும் முன் அடக்கிவிட்டேன்.
ஆனால் இன்னொன்று தோன்றியது.
"நீதானே எழுத்தாளன்..? நேரடியா சொல்லிடு.! அந்தப்புகைப்படம் வெச்சு எழுதணும்னு அவர்கிட்ட கேள்..!தரவேண்டியது அவர் கடமை.!"
சொன்னேன்.
"இருந்துட்டு போங்க தம்பி.! எழுத்தாளர்னா..? இந்த புத்தகம் எழுதி இருக்கீங்க அவ்ளோதானே..? நீங்க எழுதலனா நாளைக்கு வேற ஒருத்தர் எழுதலாம். இல்ல இன்னொருத்தர் எழுதலாம்.! ஆனா, எழுதப்படுறது, ஒரு மாவீரனின் குடும்பம் பற்றியும் ஒரு இனப்போராட்டத்தின் வலியைப் பற்றியும். இங்கே யார் எழுதறாங்க, அவங்க பேர் என்ன, இதெல்லாம் முக்கியம் இல்ல..என்ன எழுதப்படுது அப்டிங்கிறதுதான் முக்கியம்.! உங்க புத்தகத்தின் பேர்தான் என்னை ஈர்த்ததே தவிர, நீங்க இல்ல.!"
இப்போது(ம்) எனக்கு,
ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.!!!
என் அறிவு, மன, மூளை என்று எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டிருந்தது அவரது வார்த்தைகள்.
உண்மைதான்.
நாம் எல்லோருமே பூஜ்யம். நம் பெயரும் பூஜ்யம். நமது செயல் மட்டுமே நிதர்சனம். இப்பூவுலகுக்கு நாம் விட்டுச்செல்லப்போவது எதை என்று உணர்ந்து யோசித்தால், நாம் சூனியம் என்பது விளங்கும். படைப்பால் நாம் என்றும் நிலைத்திருக்க, இந்த பெயர் பாராட்டு இதன்பின்னே எல்லாம் போகாமல், அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தப்போகும் விஷயங்களில் கவனம் வைப்போம்.! ஒரு இனப்போராட்டத்தின் முன்னே, அதற்காக அவர்கள் செய்த தியாகத்தின் முன்னே, நாமெல்லாம் வெறும் தூசு.!! இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது..!ச்சை..என்ன பிறவி நாம்..?
நிறைய தெளிய வைத்திருந்தார்.
------------------
ஒரு புத்தகம் எழுதும்போது மட்டுமல்ல, எழுதிமுடித்த பின்னும் கொடுக்கும் அனுபவங்கள்தான் எத்தனை அலாதி...?
நேசிக்கப்படவும் வைக்கிறது.
யோசிக்கப்படவும் வைக்கிறது.
End of the day,
அந்த பிரான்ஸ் பெண்ணுக்கும் இந்தப்பேராசிரியருக்கும் புத்தகம் அனுப்பிவைத்தேன்.
அது மட்டுமே என் கடமை.
-------------------
குறிப்பு:
இந்த முதல் சம்பவம் எழுதும்போது, குழலோன் புத்தகத்துக்காக ஒரு வருடம் காத்திருந்து சென்னையில் கையெழுத்து வாங்கிய கல்பனா, ஃபாத்திமா, சந்தியாவும், கத்தாரில் ஷோபனா, கோகுல்ஷர்மிளாவுக்கு இட்டுக்கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.
இரண்டாவது சம்பவம் எழுதும்போது, சாட்சாத் இப்போது நான் அறிவித்திருக்கும் சிறுகதைப்போட்டிக்கான தலைப்பு/Content (கலந்துகொள்ள விரும்புவோர்க்கு லிங்க் கமெண்ட் செக்ஷனில்) நினைவுக்கு வந்தது. நீங்கள் எழுதும்போதும், யாராக எழுதுகிறீர்கள், எத்தனை பேருக்கு அது பிடிக்கும் என்றெல்லாம் பார்க்காதீர்கள். இந்த சமூகத்துக்கு என்ன மாதிரியான படைப்பைக் கொடுக்கிறீர்கள் என்று மட்டுமே யோசியுங்கள். அதுதான்,
"Likes-க்கு அப்பால்"
-----------------------
Writer Charithraa's
https://www.instagram.com/charithraas/
Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I