07/08/2026
“ Waiting Series Pic_3 “
தலைப்பு: தாத்தாவும்… பேத்தியும்…
மதுரை செல்லூர் வைகை ஆறு ...
ஒரு காலத்துல நிரம்பி ஓடுன ஆறு. ஆனா இன்னிக்கு கெண்ட கால் அளவு கூட தண்ணி இல்ல
படத்துல இருக்கிறது ஒரு வயதான தாத்தாவும், அவரோட பேத்தியும் , கூடவே அவங்க வீட்டு 3 மாடுகளும்.
பேத்தி கேக்குறா என்ன தாத்தா உம்முனே வர்ற…
அதுக்கு தாத்தா ...
25 வருஷத்துக்கு முன்னாடி
"இந்த இடத்துல எல்லாம் தண்ணி இடுப்பு வரைக்கும் இருக்கும் தாயி. நானும் உங்க பாட்டியும் இங்கதான் மாட்ட குளிப்பாட்டுவோம். துணி துவைப்போம், தொவச்ச துணிய கரை மேல பரத்தி விட்டு வந்து …
அந்தா தெரியுது பாரு கல் மண்டபம்
அந்த கல் மண்டபத்துல போய் உட்கார்ந்து காலைல கொண்டு வந்த பழைய சோறு, கருவாடு கூட்டு , சின்ன வெங்காயம் வச்சு சாப்பிடுவோம்…
அப்புறம் அங்கேயே செத்த நேரம் தலைய சாய்ப்போம்…
இந்த காலத்துல காலை வெயிலையே நம்மளால தாங்க முடியல …
ஆனா அப்போ மதிய நேரத்துல கூட ஒரு விதமா காத்து வீசும் பாரு… அது எப்டி இருக்கும்னா…
மத்தியான நேரத்தில நல்லா அலஞ்சு திருஞ்சு ரொம்ப அசதியா வீட்டுக்கு வந்தா உடனே உங்க பாட்டி ஒரு செம்புல மண்பானை தண்ணி மெத்தி வந்து கொடுப்பா அது நம்ம தொண்டைக்குள்ள போறப்ப எப்டி குழு குழு னு (ப்பா… இப்ப சொல்லும்போது அந்த உணர்வு ) இதமா இருக்குமோ அதே போல தான்…
அந்த காலத்துல மதிய நேரமா இருந்தாலும் சரி இந்த கல் மண்டபத்ல இருக்கும்போது இந்த காத்து அவ்ளோ இதமா மென்மையா இருக்கும்.
ஆத்து மணல்ல அந்த நேரத்திலேயும் சில இளைங்கர்கள் கபடி விளையாடுவாங்க … கொஞ்சம் தள்ளி சின்ன பசங்க தண்ணிக்குள்ள குதிச்சு விளையாடுவாங்க… சிலர் மீன் பிடிக்க தூண்டி போடுவதும் இன்னும் சில மீன் காரவங்க பானை பரி அமைத்தும் மீனு பிடிப்பாங்க… இப்படி இன்னும் பல விஷயங்கள சொல்லிகிட்டே போகலாம்…
ம்ம்ஹ் ….
அப்படியே சாயங்காலம் வந்துரும்
காஞ்ச துணிய எடுத்துகிட்டு, மேஞ்சுகிட்டு இருந்த நம்ம மாட்டையும் கூட்டிட்டு கிளம்பிருவோம்னு பெருமூச்சு விட்டார் …
ஆனா இன்னிக்கு?
தண்ணி இல்ல. ஆனா ஆறு ஓடிய தடம் மட்டும்தான் இருக்கு. அங்கங்க கொஞ்சம் கிடை தண்ணிதான் கிடக்கு. அந்த தண்ணிய குடிக்கத்தான் மாட்ட கூட்டிட்டு வந்திருக்காங்க.
தாத்தாவும், பேத்தியும் தினமும் இங்க வந்துடுவாங்க. மாடு தண்ணிய குடிக்கும். தாத்தாவும் வானத்த பார்த்து காத்திருப்பார் …
இதுக்கு மழையும் ஒரு காரணமா இருக்கலாம் ஆனா,
குப்பை போடாம,
கழிவு நீர் கலக்காம,
ஆக்கிரமிப்பு பண்ணாம,
மழைநீர சேமிச்சா...
ஒருநாள் வைகை ஆற்றில் தண்ணீர் மறுபடியும் ஓடும் என்ற கத்திருப்பு
செல்லூர் மட்டும் இல்ல.
வைகைய சுத்தி இருக்குற லட்சக்கணக்கான மக்களோட காத்திருப்பு,
மாடு, மரம், பறவை... இன்னும் பல உயிர்களோட காத்திருப்பு…
நினைவுகள் திரும்ப நிகழ்வுகளாக மாறும் என எனது ஓவியத்தின் மூலம் எனது காத்திருப்பும் கூட…
காத்திருக்கிறது மட்டும் இல்ல, இயற்கையாய் கிடைத்த எல்லா ஆறுகளையும் காக்கவும் செய்யனும்…
பேரன்புடன்…
பிரேம் நசீர் கா
மதுரை ஓவியன்
#காத்திருப்பு